×

மிக்ஜாம் புயல் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றிய அரசின் வெள்ளப்பாதிப்பு மதிப்பீட்டுக்குழுவினர் ஆய்வு: நெற்பயிர், படகுகள், பாலங்கள், குடியிருப்புகள் சேதாரம் குறித்து விவரம் சேகரிப்பு

திருவள்ளூர், டிச. 14: திருவள்ளூர் மாவட்டத்தில் மிக்ஜாம் புயல் மழையால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளை வேளாண்மை, கூட்டுறவு மற்றும் விவசாயிகள் துறை இணை இயக்குநர் ஏ.கே.சிவ்ஹரே தலைமையில் குழு உறுப்பினர்கள் விஜயகுமார், பவ்யா பாண்டே ஆகியோர் அடங்கிய ஒன்றிய அரசின் வெள்ளப்பாதிப்பு மதிப்பீட்டுக்குழுவினர் நேரில் பார்வையிட்டு நேற்று ஆய்வு செய்தனர். மிக்ஜாம் புயல் மழையால் பாதிக்கப்பட்ட ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் புயல் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஒன்றிய அரசின் வெள்ளப்பாதிப்பு மதிப்பீட்டுக்குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மழை வெள்ளப் பாதிப்புகள் குறித்து நகராட்சி நிர்வாக செயலர் கார்த்திகேயன், மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர், இணை ஆணையர் சிம்ரஞ்சித் சிங் கலோன், ஆவடி மாநகராட்சி ஆணையர் ஷேக் அப்துல் ரகுமான் ஆகியோர் ஒன்றிய அரசின் வெள்ளப்பாதிப்பு மதிப்பீட்டுக்குழுவினருக்கு விளக்கினர்.

புழல் ஏரியினை ஒன்றிய குழு பார்வையிட்டு ஆய்வு செய்தது. மிக்ஜாம் புயல் மழையால் பாதிக்கபட்ட சோழவரம் ஏரி மற்றும் சிதிலமடைந்த மண் கரைகளையும் ஒன்றியக்குழு பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதனைத்தொடர்ந்து, மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரில் உள்ள மாநில நெடுஞ்சாலையில் புயல் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மாநில சாலையையும் மாவட்டம் முழுவதும் உள்ள சிறு பாலங்கள் சாலைகளின் ஓரமாக உள்ள தடுப்பு சுவர்கள் ஆற்றின் குறுக்கே உள்ள பாலங்களில் ஏற்பட்டுள்ள சேதாரங்கள் குறித்து புகைப்படம் மற்றும் குறும்படங்கள் மூலம் ஒன்றிய அரசின் வெள்ளப்பாதிப்பு மதிப்பீட்டுக்குழு விளக்கம் அளிக்கப்பட்டது. பொன்னேரி வட்டம், வன்னிப்பாக்கம் ஊராட்சியில் அமைந்துள்ள அனுப்பம்பட்டு மற்றும் அத்திப்பட்டு கூட்டுக் குடிநீர் திட்ட பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டு வரும் திறந்தவெளி மற்றும் ஆழ்துளை கிணறுகள் மிக்ஜாம் புயலின் போது பாதிக்கப்பட்டுள்ள மின்மோட்டார்கள் பழுது மற்றும் நீர் ஏற்றும் பம்ப் ஹவுஸ் நீரில் மூழ்கியுள்ளதையும் நேரடியாகவும் புகைப்படங்கள் மூலமாகவும் ஒன்றிய அரசின் வெள்ளப்பாதிப்பு மதிப்பீட்டுக்குழுவிடம் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் விளக்கிக் கூறினர்.

இதனைத்தொடர்ந்து, தத்தமஞ்சி ஊராட்சி பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள் குறித்து ஒன்றியக் குழுவினர் நேரடியாகவும், விவசாயிகளின் வயல்களையும் பாதிக்கப்பட்ட பகுதிகளையும் ஆய்வு செய்தும், வேளாண்மை துறை சார்பில் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், வாழைப்பயிர்கள் பூச்செடிகள், காய்கறிச்செடிகள், பழச்செடிகள், கால்நடைகளுக்கான தீவனப்பயிர்கள் சேதம் அடைந்துள்ளதையும், பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள் காட்சிப்படுத்தப்பட்ட அரங்கம், மற்றும் பாதிப்புகள் குறித்த புகைப்படங்கள் மற்றும் குறும்படங்கள் மூலம் நேரடியாக பார்வையிட்டும் விவசாயிகளிடம் கலந்துரையாடினர்.

மேலும், பழவேற்காடு பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு சேதமடைந்துள்ள குடியிருப்பு பகுதிகள், மீன்பிடி படகுகள், மோட்டார்கள், மீன்பிடி உபகரணங்கள், மீன்பிடி வலைகளின் சேதங்கள் மற்றும் மீன் ஏலக்கூடம் மழை வெள்ளத்தால் சேதமைந்துள்ளதையும் நேரில் பார்வையிட்டு, வெள்ள பாதிப்புகள் குறித்து மீனவர்கள் மற்றும் மீனச்சங்க பிரதிநிதிகளிடமும் கலந்துரையாடினர். இந்த ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.ராஜ்குமார், பொன்னேரி சப் கலெக்டர் ரா.ஐஸ்வர்யா, வருவாய் கோட்டாட்சியர்கள் திருத்தணி தீபா, திருவள்ளுர் (பொ) ஐவண்ணன், ஆவடி காவல் துணை ஆணையர் அய்மன்ஜமால், மாநகராட்சி துணை ஆணையர் சங்கரன், கண்காணிப்பு பொறியாளர் அன்பழகன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பொதுப்பணி திலகம், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ரூபேஷ், உதவி பொறியாளர் (நீர்வளம்) சதீஷ்குமார் மற்றும் துறைச்சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

The post மிக்ஜாம் புயல் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றிய அரசின் வெள்ளப்பாதிப்பு மதிப்பீட்டுக்குழுவினர் ஆய்வு: நெற்பயிர், படகுகள், பாலங்கள், குடியிருப்புகள் சேதாரம் குறித்து விவரம் சேகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Union Government's Flood Impact Assessment Committee ,Migjam ,Tiruvallur ,
× RELATED மீஞ்சூர் பகுதியில் ஓடும் காரில்...